NEWS Happenings
You are here: Home » Latest News » Actor Vivek Oberoi – Vivegam Press Release

Actor Vivek Oberoi – Vivegam Press Release

இந்திய சினிமாவில் இளம் பெண்களின் கனவு கண்ணன், காதலனாக வலம் வந்தவர் தான் விவேக் ஓபராய். தமிழ் மக்களின் மீது அளவு கடந்த அன்பையும், மரியாதையையும் வைத்திருப்பவர். சுனாமியால் தமிழகம் நிலை குலைந்திருந்த போது தமிழ் மக்களுக்கு அவர் நீட்டிய ஆதரவு கரம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழ் சினிமாவில் நல்ல ஒரு அறிமுகத்துக்காக காத்திருந்த நேரத்தில் அவரின் ஃபேவரைட் ஹீரோ அஜித் படத்தில் நடிக்க அழைப்பு. விவேகம் படத்துக்கு நடிக்க கேட்ட மாத்திரத்திலேயே ஓகே சொல்லி, அஜித்துடன் நடித்தும் முடித்து விட்டார். ஆகஸ்டு 24ஆம் தேதி வெளியாக இருக்கும் விவேகம் படத்தை பற்றியும், தன் அபிமான அஜித்துடன் நடித்த அனுபவத்தை பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

என்னுடைய நேரத்தை குடும்பம், குழந்தைகள், பிஸினஸ், தொண்டு நிறுவனங்களுக்கு செலவு செய்பவன். படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இயக்குனர் சிவா என்னை சந்தித்து கதை சொன்னபோது 15 நிமிடங்கள் கேட்டேன். போதும், நான் நடிக்கிறேன் என சொல்லி விட்டேன். மொத்த கதையையும் கேட்காமல் நான் எடுத்த முடிவு சரி தான் என்பதை விவேகம் நிரூபித்து விட்டது. தமிழ் மொழியில் பேசி நடிப்பது தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது.

விவேகம் கதையை கேட்ட பிறகு, அஜித் சிவா கூட்டணியில் வெளி வந்த வீரம், வேதாளம் படங்களை பார்த்தேன். ஒரு ஹீரோவுக்கும், இயக்குனருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி புரிந்தது. ஆன்மீக புரிதல் எங்களுக்குள் சரியாக அமைந்தது.

படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் ஆர்யன், அஜித்தின் நண்பனாக நடித்திருக்கிறேன். எல்லோரும் இது ஹாலிவுட் படம் போல இருப்பதாக சொல்கிறார்கள். அப்படியில்லை, விவேகம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருக்கும் தமிழ் படம். என் வசனங்களை தங்கிலீஷில் எழுதி, மனப்பாடம் செய்து பேசி தான் நடித்தேன். இந்த படத்தில் நாம் டப் செய்யவில்லை, பிரின்ஸ் என்பவர் குரல் பொருத்தமாக அமைந்ததால் எனக்கு அவர் தான் டப்பிங் பேசினார்.

அஜித் அண்ணாவை முதல் முறை பல்கேரியாவில் சந்தித்தேன். இந்த படத்தில் நான் நடிக்க ஓகே சொன்னதற்கு நன்றி என்றார் அஜித். இந்த படத்தில் நடிப்பது எனக்கு தான் பெருமை என்றேன். நான் ஷாலினியின் தீவிர ரசிகன் என்பதையும் சொன்னேன். படப்பிடிப்பிக் எல்லோரிடமும் இனிமையாக பழகுவார். அஸிஸ்டெண்ட் உட்பட அனைவருக்கும் எந்த ஈகோவும் இல்லாமல் டீ ஊற்றி கொடுப்பார்.

அஜித் அண்ணாவுடன் நடிப்பதை கேள்விப்பட்ட என் உறவினர்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் மற்றும் என் ரசிகர்களால் எனக்கு கிடைத்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

காஜல் அகர்வால் நடித்த முதல் படமே என்னோடு தான். பல வருடங்கள் கழித்து மீண்டும் விவேகம் படத்தில் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. துள்ளலான கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் இதில் மிகவும் சென்சிட்டிவான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அக்‌ஷராவுக்கு நல்ல அறிமுகம் கிடைத்திருக்கிறது. கமல் சா, சரிகா, ஸ்ருதிஹாசன் எல்லோரும் அக்‌ஷராவை நினைத்து நிச்சயம் பெருமைப்படுவார்கள்.

மைனஸ் 17 டிகிரி குளிரில் பல்கேரியாவில் நாங்கள் படப்பிடிப்பு நடத்தினோம். 4 கோட் போட்டுக் கொண்டு நடித்த எனக்கே குளிர் தாங்கவில்லை. வசனங்கள் பேச மிகவும் கஷ்டப்பட்டேன். அதிலும் அஜித் அண்ணா வெற்று உடம்போடு நடித்தார். காலை 5 மணிக்கு ஹோட்டலில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். நான் எழுந்து போய் பார்த்தால் ஜிம்மில் அஜித் மட்டும் வொர்க் அவுட் செய்து கொண்டிருப்பார். எவ்வளவு அர்ப்பணிப்பு இருந்தால் இப்படி கடுமையான உழைப்பை கொடுக்க முடியும்.

சென்னை எனக்கு எப்போதும் பிடித்த இடம். என்னுடைய உறவினர்கள் பலரும் இங்கு தான் வசிக்கிறார்கள். சின்ன வயதில் இங்கு தான் சைக்கிளில், காரில் எல்லாம் பயணித்திருக்கிறேன். டைலர்ஸ் ரோட்டில் சுற்றியிருக்கிறேன். அந்த நேரத்தில் இப்போது பேசுவதை விட நன்றாக தமிழ் பேசினேன். வட இந்தியாவில் இருந்தாலும் எங்கள் வீட்டில் தினமும் தென்னிந்திய உணவான இட்லி, தோசை தான் காலை உணவு. தமிழ் கலாச்சாரத்தை மிகவும் மதிப்பவன். ஸ்டைல் கிங் ரஜினி சார், நடிப்பின் உச்சம் கமல் சார் எல்லோருமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான். அவர்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல, இந்தியாவின் சொத்து, இந்தியாவின் பெருமை.

அமேசான் பிரைமில் இன்சைட் எட்ஜ் என்ற மேடை நாடகத்தை நான் நடத்தினேன். பலரும் நான் சின்ன திரையில் ஏன் நடிக்கிறேன் என கேட்கிறார்கள். என் வேலையை ரசித்து செய்கிறேன். திரையரங்கிற்கு வந்து 2.25 கோடி மக்கள் தான் படம் பார்க்கிறார்கள். ஆனால் 40 கோடி மக்கள் மொபைல் ஃபோன் வைத்திருக்கிறார்கள். அவர்களை சென்றடைய ஈஸியான வழி அமேசான் போன்ற சின்னத்திரை தான். அமேசான் சிஇஓ என்னுடைய ஷோ பல ஆங்கில தொடர்களை விட அதிக வரவேற்பு பெற்றதாக அறிவித்திருக்கிறார். இதை விட வேறென்ன வேண்டும். ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட் என்றெல்லாம் இனி இல்லை. பாகுபலி என்ற டப்பிங் படம் டங்கல் என்ற இந்தி படத்தை விட அதிகம் வசூல் செய்திருக்கிறது. ஒரே சினிமா தான் இனி.

சுனாமி பாதிக்கப்பட்டு, நான் கட்டிக் கொடுத்த வீட்டில் வளர்ந்த ஒருவர் டெல்லியில், ஒரு விழாவில் என்னை சந்தித்து அந்த வீட்டில் வளர்ந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்று கூறியது நெகிழ்ச்சி அளித்தது. நான் வாங்கிய விருதுகளிலேய இது தான் உயரிய விருது. உத்திர பிரதேசத்தில் குழந்தைகளை பாலியல் தொழிலில் இருந்து மீட்டு வருகிறோம். 1 பள்ளியை ஆரம்பித்தது, இன்று 3 பள்ளிகள் மூலம் 2000 குழந்தைகளுக்கு கல்வி கொடுத்து வருகிறோம். இந்த சேவைகள் செய்வதே போதும், அரசியலுக்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஒரு அரசியல் இயக்கத்தின் சார்பு இருந்தால் எந்த சேவையும் செய்ய முடியாது.

பில்லா, சகலகலா வல்லவன் என பழைய கிளாசிக் படங்களை ரசித்திருக்கிறேன். சமீப காலங்களில் ஆரண்ய காண்டம், வீரம், வேதாளம் போன்ற தமிழ் படங்களை பார்த்து ரசித்தேன் என்றார் விவேக் ஓபராய்._L6A5426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top